மார்ச் 22-ம் தேதியான இன்று `
உலக தண்ணீர்தினம்`. 1993-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபையின் 47வது கூட்டத்தொடரில் உலக தண்ணீர் தினம் அறிவிக்கப்பட்டது. நீர்நிலைகளைக் காப்பதும், நீர்வளத்தைப் பெருக்குவதும்தான் உலக தண்ணீர் தினத்தின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக பூமியில் நிலப்பரப்பானது வெறும் 30 சதவிகிதம் மட்டும்தான். மீதம் இருக்கும் 70 சதவிகிதம் நீர்ப்பரப்பாகத்தான் உள்ளது. 70 சதவிகிதம் நீர்ப்பரப்பு இருந்தாலும் அதில் 97.5 சதவிகிதம் உப்பு நீர்ப்பரப்புதான் இருக்கிறது. இதில் நிலத்தடிநீர் வெறும் 2.5 சதவிகிதம்தான். அதில் பனிப்பாறைகளாகவும் பனித்தரைகளாகவும் உள்ளது போக மீத நன்னீர்ப் பரப்பு 0.26 சதவிகிதம்தான். இந்த நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.?
? ? 30 சதவிகிதம் நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கு 0.26? சதவிகிதம் நீர்தான் உயிராதாரம். இந்த நீரைத்தான் மனிதனின் தேவைகளுக்கும், விவசாயம் என பல வழிகளில் நாம் பயன்படுத்திக்கொள்கிறோம். கூடுதல் தண்ணீர்த் தேவைக்கு மழையையும் ஆறுகளையும் ஏரிகளையும்தான் நம்பி இருக்கிறோம். இன்று ஒருநாள் மட்டும் நீரைப்பற்றிப் பேசிவிட்டு மீதமுள்ள நாட்களில் அதனைப் பற்றி மறந்துவிடுகிறோம். தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் கடந்த 2016-ம் ஆண்டு வடகிழக்குப் பருவக்காற்றும், தென்மேற்குப் பருவக்காற்றும் ஏமாற்றிப்போனது. ஆனால் அதற்கு முந்தைய 2015-ம் ஆண்டில் பெய்தமழையை வரலாறு காணாத மழை என அறிஞர்கள் வர்ணித்தனர். ஆனால் பெய்த மழைநீரை முழுவதுமாகத் தேக்கி வைக்க முடியாமல் போனாலும், பாதியளவுகூட அப்போது தேக்கி வைக்கவில்லை என்பதே உண்மை.? அன்று தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளில் சரிபாதி நீர்நிலைகளை அழித்துக் கட்டப்பட்டது என்பதை அந்த மழை உணர்த்தியது.?
? இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் குடிநீர்ப்பஞ்சம் ஏற்படும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு காரணம், போதிய மழையின்மையும், ஏரிகள் வறண்டு வருவதுமே ஆகும். இன்று நகரமையமாக்கல் என்ற பெயரில் நீர்நிலைகளை அழித்துக் குடியேறியதன் விளைவுதான் இன்றைய குடிநீர்ப்பஞ்சம். முன்னரெல்லாம் கோடைக்காலங்களில் வீட்டுக்கு வெளியே ஒரு பாத்திரத்திலோ அல்லது பானையிலோ தண்ணீர் வைக்கப்படும். அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்கள் பானையில் உள்ள நீரை அருந்தி தனது தாகத்தைத் தணித்துக்கொள்வர். இன்றைய நிலையில் அதுபோன்ற காட்சிகளை எங்கே காணமுடிகிறது. இதற்கெல்லாம் காரணம் கட்சியையும், ஆட்சியையும் தக்கவைத்துக் கொள்ள தமிழகத்தை வறட்சிக்குத் தாரைவார்த்து விட்டனர், நம்மை ஆண்ட அரசியல்வாதிகள். காமராஜருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் நீர்த்தேக்கங்கள் கட்டப்படவில்லை என்பதே நாம் தண்ணீர் மேலாண்மையில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.? தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான ஆறுகள் இன்று வறண்ட நிலையிலும், கழிவுநீர் கலக்கப்பட்டு கொலை செய்யப்பட்டும்? கிடக்கின்றன. இதற்கெல்லாம் கோடிகள் ஒதுக்கப்படுகின்றன, ஆனால் திட்டம் முழுமையாக நடந்து வளமடைந்ததா என்பது கேள்விக்குறிதான்.?
கிராமப்புறங்களில் வாழும் இந்தியர்களில் 6.3 கோடி பேருக்கு சுத்தமான நீர் என்பது எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது என்று வாட்டர் எய்டு (WaterAid) அறிக்கை கூறுகிறது.?
? தமிழ்நாடு தண்ணீருக்காக இன்று அண்டையில் இருக்கும் மூன்று மாநிலங்களிடமும் கெஞ்சும் நிலைதான் இருக்கிறது. தண்ணீருக்குத் தவிக்கும் தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி என்ற சொல்லைக் காட்டி இயற்கை எரிவாயுவையும் அணு உலையையும் தீர்வாகத் தருகிறது, மத்திய அரசு. இந்த வளர்ச்சி என்ற சொல் தமிழ்நாட்டு விவசாயிகள் தண்ணீரின்றி வறட்சியால் உயிர்விடும்போது எங்கே போனது என்று தெரியவில்லை... இந்த `உலக தண்ணீர் தினம்` என்பது, கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் தண்ணீரைப் பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது.? `தண்ணீர் ஒரு மனிதனின் வாழ்வாதாரம்` என்பதை ஒவ்வொரு மனிதனும், அந்நாட்டு அரசும் புரிந்துகொள்ளும் வரையில் இதற்குத் தீர்வு கிடைக்காது. தமிழ்நாட்டில் வரும் கோடைக்காலம் வரலாறு காணாத வறட்சியாக இருக்கும் என்ற எச்சரிக்கையோடு தண்ணீரை இப்போதிருந்தே சேமித்துப் பயன்படுத்த ஆரம்பிப்போம்.