மதிப்பெண் சிறைக்குள் மனச்சிறகுகள் சிக்கலாமா?

மதிப்பெண் சிறைக்குள் மனச்சிறகுகள் சிக்கலாமா?

 

மதிப்பெண் சிறைக்குள்

மனச்சிறகுகள் சிக்கலாமா?

நண்பர்களே!

நம் பன்முகத் திறமைகளைத் தெரிந்து கொள்வதற்குத்தான் தேர்வுகளே தவிர, வெற்றிதோல்வியை தீர்மானிப்பதற்கல்ல!

விளையாட்டிலும், போரிலும் மட்டுமே வெற்றிதோல்வி என்ற மதிப்பீடு பொருத்தமானது!

தேர்வுகளெல்லாம் திறனின் மதிப்பீடுகளே.

கணித வளம், மொழியின் செறிவு, அறியவியல் திறன் என்ற அளவீடுகளைச் சொல்வதே தேர்வு முடிவுகள்.

தேர்வின் முடிவுகள் என்றுமே வாழ்க்கையின் முடிவுகள் ஆகாது.

தேர்வுகள், வாழ்க்கையை ஒருபோதும் சொல்லித்தருவதில்லை.

கணிதத்தில் தோற்றவர், கலையில் சிறந்து விளங்குவர்.

அறிவியல் புரியாதவருக்கு பொருளியல் கைவசமாகலாம்.

மொழி என்பது புரிந்து கொள்வதற்கு மட்டும் போதும். சிலருக்கு அது, புலமைகாட்ட தேவைப்படும்.

தேவையைப்பொருத்தே திறனின் அளவை சீர்செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

தேர்வு முடிவுகளில், சாதனை என்றோ, சறுக்கல் என்றோ எதுவும் இல்லை.

அதற்காக, மதிப்பெண்கள் குவித்து, பட்டியலில் முதலிடம் பிடித்தவர்களின் உழைப்பை ஒதுக்குவதற்கில்லை. அது, அவர்களுக்கு கைவரப்பெற்றிருக்கிறது என கொள்ள வேண்டும். அதற்காகவே, மதிப்பெண் குறைந்தவர்களை நிந்திப்பது சரியானதல்ல.

மதிப்பெண் குவித்தவர்களை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல, தான் லட்சியம் கொண்டிருந்த எண்கள் கிடைக்கப்பெறாதவர்களை, கைகுலுக்கி, கட்டியணைத்து பாராட்டுவதும் மிகவும் முக்கியம்.

தன் திறன் அறிந்தவன், எப்போதும் சத்தங்களுக்குள்ளும், சஞ்சலங்களுக்கும் சிக்குவதில்லை.

சிந்திக்க வைப்பதே கல்வி.

திறனை அறியச்செய்வதே தேர்வு.

தேர்வின் முடிவுகள், வாழ்க்கை பயணத்தில், எந்த பாதையை, நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு உதவும் ஒரு கருவி.

அவரவருக்கான பாதைகள், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. அதன்வழியே காலம் அழைத்துச் செல்லும்.

காலத்தின் குரலை கவனிப்பவருக்கு வாழ்க்கை வசப்படும்.

பூமியில் ஜனிக்கும் எந்த ஜீவனும் திறமையின்றி பிறப்பதில்லை.

கருமைநிறக் காகங்கள், குயிலைப்பார்த்து சோகம் கொள்வதில்லை.

வண்ணத் தோகை விரிக்கும் மயில்கள், பச்சைக்கிளிகளிடம் கர்வம் காட்டுவதில்லை.

தங்கள் வாழ்வின் அழகை, ஐந்தறிவு ஜீவன்களே தௌ்ளத்தெளிவாக அறிந்து வாழும்போது, ஆறறவு மனிதனிடம் மட்டும் ஏன் சஞ்சலம்.

ஆறாம் அறிவு என்பது சிந்தனையின் அடையாளம்.

வானில் பறக்க நினைக்கும், மாணவர்களின் மெல்லிய மனச்சிறகுகள், வெறும் மதிப்பெண்களுக்குள் சிறைபட விடலாமா.

அரிச்சுவடி, அம்மாவிடம் ஆரம்பமாகிறது. பேச்சு வசமானதும், ஆசிரியர் வசம் நம் வாழ்க்கை ஒப்படைக்கப்படுகிறது.

ஆசிரியர் என்பவர் பெற்றவர்களுக்குச் சமம்.

பல ஆசிரிய பெருமக்கள், பசியிலும், அறிவிலும் தவிக்கும் தங்கள் குழந்தைகளை கவனிக்கக்கூட நேரமின்றி, தன் மாணாக்கர்களுக்கு கல்வி போதிப்பதை அறிந்திருக்கிறேன்.

பல ஆசிரியர்கள், மாணவர்கள் வறுமை உணர்ந்து, உணவும், உடையும் கூட வழங்கி உயர்கிறார்கள்.

மதிப்பெண் பிறவியாக இல்லாமல், மனிதப் பிறவியாக, மாணவர்கள் வாழ வேண்டியதன் அவசியத்தை, ஆசானாக மட்டுமின்றி, பெற்றோராக, நண்பராக விளங்கும் ஆசிரிய பெருமக்கள்தான் உணர்த்த வேண்டும்.

ஏனெனில், ஆசான் வாக்கே, மாணவர்களுக்கு வேதவாக்கு.

வாழ்க்கை என்பது பலரை எதிர்கொள்ளும் களமாகும்.

விளையாட்டில் வேண்டுமானால், இரண்டு அணிகள்தான் இருக்கும். ஒரு அணிக்கு வெற்றி. எதிரணிக்கு தோல்வி.

வென்றவர் கையில் கோப்பை மிளிரும்.

தோற்றவர் முகத்தில் நம்பிக்கை ஔிரும்.

‘‘களமாட மீண்டும் ஒரு வாய்ப்பு வரும். அதற்கு தயாராவோம்’’ என்று எவர் மனம் சொல்கிறதோ அவனே உண்மையான (விளையாட்டு) வீரன்!.

தோல்வியை தோளில் சுமந்துகொண்டால், சுவாசிக்கும் மூச்சுகூட உடலுக்கு சுமையாகும்.

வெற்றிக்களிப்பில் கோப்பை ஏந்தி நிற்பவர்களைவிட, கோட்டை விட்டவர்கள் முகங்களில் நம்பிக்கை ஔி காணலாம்.

மைதானத்தில் நிற்கும்வரைதான் வெற்றிதோல்வி. அதைவிட்டு அகன்றால், இரண்டு அணிகளுமே அடுத்த விளையாட்டுக்கு தயாராக வேண்டும்.

எப்போதோ பெற்ற வெற்றியை, நிரந்தரமாக கொண்டாடிக்கொண்டிருக்க முடியாது.

சூழ்நிலை எதுவானாலும், சிந்திந்து நிதானமாகச் செயலாற்றுபவருக்கே எதுவும் வசமாகும்.

வாழ்க்கை, உங்கள் வசமாக வாழ்த்துக்கள்!!

Article By :  இராஜவல்லிபுரம்சேது

Write Feedback