மரவட்டை ( Millipedes )

மரவட்டை ( Millipedes )

 

மரவட்டை ( Millipedes ) என்பவை கணுக்காலி வகுப்பைச் சேர்ந்த உயிரினமாகும். பள்ளிக் காலத்தில் சின்ன வயதில் ஆயிரம் கால் பூச்சி என்று சொல்லி இதை புரட்டிப் போட்டு பூதக்கண்ணாடி கொண்டு அதன் கால்களை எண்ணியது உண்டு... இரண்டே முறை தான் நூறு வரை எட்டியிருப்பேன், அதற்குள் ஒன்று அது திரும்பி படுத்து விடும். இல்லையெனில் கணக்கெடுத்த கால்களை நான் தவறவிட்டு விடுவேன். பொதுவாக இதன் கால்களைக் கண்டு பல ஆண்கள் முதல் பெண்கள் வரை முகம் சுளித்தே பார்த்து இருக்கிறேன். ஆனால் அவைகள் ஒரு விந்தை என்று இவர்களுக்கு புரிவதில்லை. பெரும்பாலான மரவட்டைகள் மெதுவாக நகரும் அழுகலுண்ணிகளாகும். பெரும்பாலான மரவட்டைகள் மக்கும் இலைகளையும், ஏனைய இறந்த தாவரப் பகுதிகளையும் உணவாகக் கொள்பவை. சில பூஞ்சைகளையும் சாப்பிடக்கூடியன. மரவட்டை போன்ற பூச்சியினங்கள் இல்லாவிட்டால் நமது காடுகள் முழுவதும் காய்ந்த சருகுகள் நிறைந்த குப்பை மேடுகளாக இருந்து இருக்குமோ என்னவோ. காடுகளில் காய்ந்து உதிரும் சருகுகளை உரமாக மாற்றும் வித்தையை இது போன்ற மரவட்டைகளே செய்கின்றன. குளிர்காலங்களில் பாறைகளுக்கு இடையே உறங்கிப் போகும் இவைகள் இளவேனில் காலம் துவங்கியவுடன் சுறுசுறுப்பாகி தனது உரக் கம்பெனியை துவங்கி விடுகின்றன. இவைகளுக்கு நச்சுத்தன்மை கிடையாது. ஆனால், அச்சுறுத்தப்படும் போது அவைகள் சுருண்டு ஒரு திரவத்தை வெளியிடுகின்றன. அவைகள் சிலருக்கு ஒவ்வாமையை தருகின்றன. மரவட்டைகள் மிகப் பழமையான சில நிலவிலங்குகளில் ஒன்றாகும்.
Article &Photos: Raveendran Natarajan, Madurai.

Write Feedback