சோலைமந்தி - Lion-tailed macaque - Macaca silenus

சோலைமந்தி - Lion-tailed macaque - Macaca silenus

 

சோலைமந்தி இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மந்தி இனத்தைச் சேர்ந்த முதனிகளாகும். இம்மந்தியின் வெளிப்புற தோல் மயிர்கள் மின்னும் கரு நிறத்தைக் கொண்டவை. இதன் வால் சிங்கத்தின் வால் போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் இது Lion Tailed Macaque என்று அழைக்கப்படுகிறது. இம்மந்தியின் தமிழ்ப் பெயரான "சோலைமந்தி" என்பதை அறியாதவர்கள், இதன் ஆங்கிலப் பெயரின் நேரடி மொழிபெயர்ப்பான "சிங்கவால் குரங்கு" என்று தவறாக அழைக்கிறார்கள். இவ்விலங்கிற்கு "கருங்குரங்கு" என்றொரு பெயருமுண்டு. சங்க இலக்கியங்களில் இது நரைமுக ஊகம் என அறியப்படுகிறது. வெப்பமண்டல மழைக்காடுகளில் மட்டும் வாழும் சோலைமந்தி பகற்பொழுதில் மட்டும் சுறுசுறுப்புடன் காணப்படும் பகலாடியாகும். மரமேறுவதில் மிகவும் திறமைவாய்ந்த இம்மந்தி தன் பெரும்பாலான நேரத்தை உயர்ந்த மரக்கிளைகளிலேயே கழிக்கும். மிகவும் கூச்சவுணர்வுடைய இவ்விலங்குகள் மனிதர்களைத் தவிர்த்தே வாழவிரும்புபவை. இவை 10 முதல் 20 வரையிலான உறுப்பினர்களைக் கொண்டக் குழுக்களாக வாழும் நடத்தையைக் கொண்டவை. ஒரு குழுவில் ஒரு சில ஆண் மந்திகளும் பல பெண் மந்திகளும் இருக்கின்றன. ஒவ்வொரு குழுவும் தனக்கென்று ஒரு எல்லையை வகுத்திருக்கும், தங்கள் எல்லைக்குள் வேறொரு குழு நுழையும்பொழுது, மிகுந்த ஓசையுடன் கூச்சலிடும், சில வேளைகளில் வேற்றுக்குழு உறுப்பினருடன் சண்டைகளும் நடக்கும். இவை பழங்கள், இலைகள், பூவின் மொட்டுகள், பூச்சிகள், முதுகெலும்பற்ற சிறு விலங்குள் ஆகியவற்றை உண்கின்றன. இம்மந்திகள் பகற்பொழுதில் பெரும்பாலான நேரத்தை உணவு தேடுவதிலேயே கழிக்கின்றன.

Photo: Raveendran Natarajan, Madurai. 

Write Feedback