உலக ரேபீஸ் தினம் - world Rabies Day

உலக ரேபீஸ் தினம் - world Rabies Day

 

உலக வெறிநாய்க்கடி நோய் தினம் (உலக ரேபீஸ் தினம்)

உலக வெறிநாய்க்கடி நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28-ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. வெறிநாய்க்கடி நோய் பரவுவதைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப் படுகிறது. வெறிநாய்க்கடி நோயை எதிர்த்துப் போராட உலகை ஒன்றிணைக்கும் ஒரு முயற்சி இது. இந்த ஆண்டின் கருத்து வாசகம் : கற்பி - தடு -ஒழி.

 

வெறிநாய்க்கடி ஓர் ஆபத்தான நோயாகும்.

அது மனித மூளையைப் பாதிக்கிறது. ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கானோர் இதனால் மரணம் அடைகின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி வெறிநாய்க்கடி நோயால் 95 % மரணம் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலுமே ஏற்படுகிறது. நாய்க்கடிக்கு அதிகமாக உள்ளாகும் குழந்தைகளுக்கே தொற்று ஏற்படும் ஆபத்தும் கூடுதலாக இருக்கிறது. ஒவ்வொரு பத்து மரணங்களிலும் நான்கு மரணங்கள் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கே ஏற்படுகின்றன.

 

லிஸ்ஸாவைரசால் உண்டாவதே வெறிநாய்க்கடி நோய். காயம், கீறல் அல்லது பாதிக்கப்பட்ட ஒரு மிருகத்தின் சளிச்சவ்வுப் பரப்போடு நிகழும் தொடர்பால் (கடி போன்றவை) இந்த வைரஸ் விலங்கில் இருந்து மனிதருக்குப் பரவுகிறது. மனித உடலின் காயமற்ற பகுதியின் வழியாக இந்த வைரஸ் பரவ முடியாது. மனிதத் தோல் அல்லது சதைப் பகுதியை அடைந்த வைரஸ், தண்டு வடத்திற்கும் மூளைக்கும் முன்னேறுகிறது. வைரஸ் மூளையை எட்டியவுடன் தொற்றால் பாதிக்கப்பட்டவரிடம் அறிகுறிகள் தோன்றுகின்றன.

 

வெறிநாய்க்கடி நோய் உயிருக்கு ஆபத்தானது என்றாலும் தடுப்பூசியால் 100% தடுக்கக் கூடியதே.

 

வெறிநாய்க்கடி நோயைத் தடுக்கப் பின்பற்ற வேண்டிய சில முறைகள் வருமாறு:

வெறிநாய்க்கடி நோயைப் பற்றிய விழிப்புணர்வைக் குறிப்பாகக் குழந்தைகளிடம் ஏற்படுத்துதல்.

தெருநாய்களிடம் தேவையற்றத் தொடர்பைத் தவிர்த்தல்.

தெரு நாய்கள் மற்றும் வீட்டு நாய்களுக்கு தடுப்பூசி இடுதல்.

வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களோடு தொடர்பு ஏற்படக்கூடிய நாய் பிடிப்பவர்களும், மருத்துவப் பணியாளர்களும், குறிப்பாகக் கிராமப் பகுதிகளில் நேரத்தை அதிகமாகச் செலவிடும் பயணிகளும் தடுப்பூசி இட்டுக் கொள்ள வேண்டும்.

விலங்கு கடித்து விட்டால் தடுப்பூசி இட உடனடியாக ஒரு மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

 

வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உண்டாகும் அறிகுறிகள்

காயத்தில் வலி அல்லது அரிப்பு

காய்ச்சல்

 2-4 நாட்கள் நீடிக்கும் தலைவலி

நீரைக் கண்டு அஞ்சுதல்

பிரகாசமான ஒளி அல்லது சத்தத்தைப் பொறுத்துக்கொள்ள இயலாமை

சித்தப்பிரமை

நடத்தை மாற்றம்

 

செல்லப் பிராணி விரும்புவோர்க்குக் குறிப்புகள்

செல்லப்பிராணிகளுக்குத் தடுப்பூசி இடவும்

செல்லப்பிராணிக்குத் தடுப்பூசி இடாத நிலையில் அது கடித்தால்/பிராண்டினால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

இந்நோயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு இந்த உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தில் நாம் யாவரும் உலக நோய் எதிர்ப்புப் போரில் ஒன்றுபட்டு இந்த உயிர்க்கொல்லி நோயை ஒழிக்கப் பாடுபடுவோம்.

 

வெறிநாய்க்கடி நோய் பற்றி அடிக்கடி கேட்கும் கேள்விகள்

வெறிநாய்க்கடி நோய் என்றால் என்ன?

வெறிநாய்க்கடி ஓர் ஆபத்தான நோயாகும். இது நாய் அல்லது பிற விலங்குகளால் உண்டாகிறது. இதனால் தொற்று ஏற்பட்டவர்களின் மூளை பாதிக்கப் படுகிறது.

 

வெறிநாய்க்கடி நோய் எப்போதுமே ஆபத்தானதா?

உலகம் முழுவதும் இந்நோய் 100 % உயிருக்கு ஆபத்தானதே ஆகும். இதைக் குணப்படுத்த எந்த ஒரு குறிப்பான மருத்துவமும் இல்லை.

 

வெறிநாய்க்கடி நோய் பரவுவதற்கு முன் அதைத் தடுக்கத் தடுப்பு மருந்து எதுவும் உண்டா?

ஆம். இந்த நோய்த்தடுப்பூசி விலங்கு கடித்த பின் 0, 7, மற்றும் 21 அல்லது 28 வது நாட்களில் அளிக்கப்படுகிறது .

 

விலங்கு கடித்துவிட்டால் என்ன செய்வது?

விலங்கு கடித்துவிட்டால் ஒருவர் பின் வரும் முறைகளைக் கையாள வேண்டும்.

 

காயத்தைப் 10-15 நிமிடங்களுக்கு சோப்பும் தண்ணீரும் கொண்டு கழுவ வேண்டும். சோப்பு இல்லாவிட்டால் நீரைப் பீய்ச்சிக் கழுவ வேண்டும். 70% ஆல்ககால்/எத்தனால் அல்லது பொவிடோன்ஐயோடின் பயன்படுத்தியும் காயத்தைக் கழுவலாம்.

கூடிய விரைவில் ஒரு மருத்துவரிடம் செல்லவும்.

 

வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியை எப்போது இட வேண்டும்?

கடித்த விலங்கு தெருவில் அலைவதாக இருந்தாலோ அல்லது நோய் அறிகுறிகளோடுகாணப்பட்டாலோ/நோயுள்ளது என்று தெரிந்தாலோ உடனடியாகத் தடுப்பூசி இடத்தொடங்க வேண்டும்.தடுப்பூசி 0, 3, 7, 14, 28 மற்றும் 90 (கட்டாயமல்ல) ஆகிய நாட்களில் இட வேண்டும்.

 

விலங்கு கடித்த ஒரு கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண்ணுக்குத் தடுப்பூசி இடலாமா?

ஆம். வளரும் கருவை தடுப்பு மருந்து பாதிப்பதில்லை. எனவே கர்ப்பிணிக்கும் பாலூட்டும் தாய்க்கும் தடுப்பூசி இடுவது பாதுகாப்பானதே.

 

வளர்க்கும் செல்ல நாய்க்குத் தடுப்பூசி இடுவது அவசியமா?

ஆம். வருமுன் காப்பதே மேலானது. வளர்ப்பு நாய்க்குத் தடுப்பூசி இடுவது நாய்க்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது.

 

Source By : https://www.nhp.gov.in/

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Write Feedback